திருவாய் மொழி ஒன்பதாம் பத்து
3673 கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும்,
கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை,
எண்டி சையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான்,
தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே. 1.1
3674 துணையும் சார்வு மாகுவார்போல் சுற்றத் தவர்பிறரும்,
அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்,
கணையொன் ராலே யேழ்மாமரமு மெய்தேங் கார்முகிலை,
புணையென் றுய்யப் போகிலல்லா லில்லைகண் டீர்பொருளே. 1.2
3675 பொருள்கை யுண்டாய்ச் செல்லக்
காணில் போற்றியென் றேற்றெழுவர்,
இருள்கொள் துன்பத் தின்மை
காணில் என்னேஎன் பாருமில்லை,
மருள்கொள் செய்கை யசுரர்
மங்க வடமது ரைப்பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல்
அல்லால் இல்லைகண் டீரரணே. 1.3
3676 அரணம் ஆவர் அற்ற
காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,
இரணம் கொண்ட தெப்பர்
ஆவர் இன்றியிட் டாலுமஃஅதே,
வருணித் தென்னே வடமது
ரைப்பி றந்தவன் வண்புகழே,
சரணென் றுய்யப் போகல்
அல்லால் இல்லைகண் டீர்சதிரே. 1.4
3677 சதுரம் என்று தம்மைத்
தாமே சம்மதித் தின்மொழியார்,
மதுர போக மதுவுற்
றவரே வைகிமற் றொன்றுறுவர்,
அதிர்கொள் செய்கை யசுரர்
மங்க வடமது ரைப்பிறந்தாற்க,
எதிர்கொள் ஆளாய் உய்யல்
அல்லால் இல்லைகண் டீரின்பமே. 1.5
3678 இல்லை கண்டீர் இன்பம்
அந்தோ. உள்ளது நினையாதே,
தொல்லை யார்க ளெத்த னைவர்
தோன்றிக் கழிந்தொழிந்தார்?
மல்லை மூதூர் வடம
துரைப்பி றந்தவன் வண்புகழே,
சொல்லி யுய்யப் போகல்
அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 1.6
3679 மற்றொன் றில்லை சுருங்கச்
சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,
சிற்ற வேண்டா சிந்திப்
பேயமை யும்கண் டீர்களந்தோ.
குற்றமன் றெங்கள் பெற்றத்
தாயன் வடமது ரைப்பிறந்தான்,
குற்ற மில்சீர் கற்று
வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 1.7
3680 வாழ்தல் கண்டீர் குணமி
தந்தோ. மாயவன் அடிபரவி,
போழ்து போக வுள்ள
கிற்கும் புன்மையி லாதவர்க்கு,
வாழ்து ணையா வடம
துரைப்பி றந்தவன் வண்புகழே,
வீழ்து ணையாய்ப் போமி
தனில்யா துமில்லை மிக்கதே. 1.8
3681 யாது மில்லை மிக்க
தனிலென் றன்ற துகருதி,
காது செய்வான் கூதை
செய்து கடைமுறை வாழ்கையும்போம்,
மாது கிலிங்கொ டிக்கொள்
மாட வடமது ரைப்பிறந்த,
தாது சேர்தாள் கண்ணன்
அல்லால் இல்லைகண் டீரிசரணே. 1.9
3682 கண்ணன் அல்லால் இல்லை
கண்டீர் சரணது நிற்கவந்து,
மண்ணின் பாரம் நீக்கு
தற்கே வடமது ரைப்பிறந்தான்,
திண்ண மாநும் முடைமை
யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ,
எண்ண வேண்டா நும்ம
தாதும் அவனன்றி மற்றில்லையே. 1.10
3683 ஆதும் இல்லை மற்ற
வனிலென் றதுவே துணிந்து,
தாது சேர்தோள் கண்ண
னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,
தீதி லாத வொண்தமிழ்
கள் இவை ஆயிரத்து ளிப்பத்தும்,
ஓத வல்ல பிராக்கள்
நம்மை யாளுடை யார்கள்பண்டே. 1.11
3684 பண்டைநா ளாலே நிந்திரு வருளும்
பங்கயத் தாள்திரு வருளும்
கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால்
குடிகுடி வழிவந்தாட் செய்யும்,
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன்
தாமரைக் கண்களால் நோக்காய்,
தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த
திருபுளிங் குடிக்கிடந் தானே. 2.1
3685 குடிகிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த
அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்
அடிக்கட வாதே வழிவரு கின்ற
அடியரோர்க் கருளி,நீ யொருநாள்
படிக்கள வாக நிமிர்த்தநின் பாத
பங்கய மேதலைக் கணியாய்,
கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத்
திருபுளிங் குடிக்கிடந் தானே. 2.2
3686 கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தியுன் திருவுடம் பசைய,
தொடர்ந்துகுற் றவேல் செய்துதொல் லடிமை
வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடந்தோள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன்
தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய்
திருபுளிங் குடிக்கிடந் தானே. 2.3
3687 புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே
என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்பநீ காணவா ராயே. 2.4
3688 பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காண
வந்துநின் பன்னிலா முத்தம்,
தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண்
டாமரை தயங்குநின் றருளாய்,
பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்
தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
கவளமா களிற்றி னிடர்கெடத் தடத்துக்
காய்சினப் பறவையூர்ந் தானே. 2.5
3689 காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்
மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங்
கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே. கதிர்முடி யானே.
கலிவயல் திருபுளிங் குடியாய்,
காய்சின ஆழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் இடர்கடி வானே. 2.6
3690 எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே.
இமையவர் தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து
நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 2.7
3691 எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
இணையடி தொழுதெழுந் திறைஞ்சி
தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால்
தலைதலைச் சிறந்தபூ சிப்ப,
திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்.
திருவைகுந் தத்துள்ளாய். தேவா,
இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள்
இருந்திடாய் வீற்றிடங் கொண்டே. 2.8
3692 வீற்றிடங் கொண்டு வியங்கொள்மா ஞாலத்
திதனுளு மிருந்திடாய், அடியோம்
போற்றியோ வாதே கண்ணினை குளிரப்
புதுமலர் ஆகத்தைப் பருக,
சேற்றிள வாளை செந்நெலூ டுகளும்
செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
கொடுவினைப் படைகள்வல் லானே. 2.9
3693 கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்
கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே.
கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள்
கூவுதல் வருதல்செய் யாயே. 2.10
3694 கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரைகடல் கடைந்தவன் தன்னை,
மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல்
வழுதிநா டஞ்சட கோபன்,
நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையுமோர் பத்தும்வல் லார்கள்,
ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான்
அடியிணை யுள்ளத்தோர் வாரே. 2.11
3695 ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்
பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்
காரா யினகா ளநன்மே னியினன்,
நாரா யணன்நங் கள்பிரான் அவனே. 3.1
3696 அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. 3.2
3697 அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே. 3.3
3698 மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,
பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்
கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும்தே வலைசோ ரேல்கண்டாய் மனமே. 3.4
3699 மனமே. உன்னைவல் வினையேன் இரந்து,
கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,
புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,
இனமே துமிலா னையடை வதுமே. 3.5
3700 அடைவ துமணி யார்மலர் மங்கைதோள்,
மிடைவ துமசு ரர்க்குவெம் போர்களே,
கடைவ தும்கட லுள் அமுது, என்மனம்
உடைவ தும் அவற் கேயொருங் காகவே. 3.6
3701 ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்
ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை,
மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்
ஏக மெண்ணும் இராப்பக லின்றியே. 3.7
3702 இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,
ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,
சென்று தேவர்கள் கைதொழு வார்களே. 3.8
3703 தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,
எழுது மென்னும் இதுமிகை யாதலில்,
பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,
தழுவு மாறறி யேனுன தாள்களே. 3.9
3704 தாள தாமரை யானுன துந்தியான்,
வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,
ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,
நாளும் என்புகழ் கோவுன சீலமே? 3.10
3705 சீல மெல்லையி லானடி மேல்,அணி
கோல நீள்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்
பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே. 3.11
3706 மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே,
வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்
கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே. 4.1
3707 கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 4.2
3708 அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 4.3
3709 உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே. 4.4
3710 அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 4.5
3711 கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்
திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்
தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே. 4.6
3712 உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,
மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா
நகந்தாய், நரசிங் கமதாய வுருவே. 4.7
3713 உருவா கியாஅறு சமயங்கட் கெல்லாம்,
பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும்,
அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,
கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே. 4.8
3714 கண்டுகொண் டேனேகண் ணிணையாரக் களித்து,
பண்டை வினையாயின பற்றோ டறுத்து,
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத் தமரர் பெருமான். அடியேனே. 4.9
3715 அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்
நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே. 4.10
3716 ஆற மதயானை அடர்த்தவன் றன்னை,
சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,
நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,
ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே. 4.11
3717 இன்னுயிர்ச் சேவலும் நீரும்
கூவிக்கொண்டுயிங் கெத்தனை,
என்னுயிர் நோவ மழிற்றேன்
மின்குயில் பேடைகாள்,
என்னுயிர்க் கண்ண பிரானை
நீர்வரக் கூவுகிலீர்,
என்னுயிர்க் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ? 5.1
3718 இத்தனை வேண்டுவ தன்றந்தோ.
அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நுஞ்சே
வலும்கரைந் தேங்குதிர்,
வித்தகன் கோவிந்தன் மெய்ய
னல்ல னொருவர்க்கும்,
அத்தனை யாமினி யென்னு
யிரவன் கையதே. 5.2
3719 அவன்கைய தேயென தாருயிர்
அன்றில் பேடைகாள்,
எவன்சொல்லி நீர்குடைந் தாடு
திர்புடை சூழவே,
தவம்செய் தில்லா வினையாட்டி
யெனுயி ரிங்குண்டோ ,
எவன்சொல்லி நிற்றும்நும் ஏங்கு
கூக்குரல் கேட்டுமே. 5.3
3720 கூக்குரல் கேட்டும் நங்f கண்ணன்
மாயன் வெளிப்படான்,
மேற்கிளை கொள்ளேன்மின் நீரும்
சேவலும் கோழிகாள்,
வாக்கும் மனமும் கரும
மும்நமக் காங்கதே,
ஆக்கையு மாவியும் அந்தரம்
நின்று ழலுமே. 5.4
3721 அந்தரம் நின்றுழல் கின்ற
யானுடைப் பூவைகாள்,
நுந்திரத் தேது மிடையில்
லைகுழ றேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டியிவ்
வேழுல கும்கொண்ட,
நந்திரு மார்பன் நம்மாவி
யுண்ணநன் கெண்ணினான். 5.5
3722 நன்கெண்ணி நான்வ ளர்த்த
சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீமிழிற் றேலென்
னாருயிர்க் காகுத்தன்,
நின்செய்ய வாயொக்கும் வாயங்கண்
ணங்கை காலினன்,
நின்பசுஞ் சாம நிறத்தன்
கூட்டுண்டு நீங்கினான். 5.6
3723 கூட்டுண்டு நீங்கி கோலத்
தாமரைக் கட்செவ்வாய்,
வாட்டமி லெங்கரு மாணிக்கம்
கண்ணன் மாயன்போல்,
கோட்டிய வில்லொடு மின்னும்
மேகக் குழாங்கள்காள்,
காட்டேன் மின்நும் முருவென்
னுயிர்க்கது காலனே. 5.7
3724 உயிர்க்கது காலனென் றும்மை
யானிரந் தேற்கு,நீர்
குயிற்பைதல் காள்.கண்ணன் நாம
மேகுழ றிக்கொன்றீர்,
தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா
லடிசிலும் தந்து,சொல்
பயிற்றிய நல்வள மூட்டினீர்
பண்புடை யீரே. 5.8
3725 பண்புடை வண்டொடு தும்பிகாள்.
பண்மிழற் றேன்மின்,
புண்புரை வெல்கொடு குத்தாலொக்
கும்நும் இன்குரல்,
தண்பெரு நீர்த்தடந் தாமரை
மலர்ந்தா லொக்கும்
கண்பெருங் கண்ணன், நம்மாவி
யுண்டெழ நண்ணினான். 5.9
3726 எழநண்ணி நாமும் நம்வான
நாடனோ டொன்றினோம்,
பழனநன் னாரைக் குழாங்கள்
காள்.பயின் றென்னினி,
இழைநல்ல வாக்கை யும்பைய
வேபுயக் கற்றது,
தழைநல்ல இன்பம் தலைப்பெய்
தெங்கும் தழைக்கவே. 5.10
3727 இன்பம் தலைப்பெய் தெங்கும்
தழைத்தபல் லூழிக்கு,
தண்புக ழேத்தத் தனக்கருள்
செய்த மாயனை,
தெங்குரு கூர்ச்சட கோபன்fசொல்
லாயிரத் துள்ளிவை,
ஒன்பதோ டொன்றுக் கும்மூ
வுலகு முருகுமே. 5.11
3728 உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. 6.1
3729 நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,
நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே. 6.2
3730 நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை
ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,
சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேன். 6.3
3731 அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 6.4
3732 திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,
உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,
திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கருவளர் மேனிஎன் கண்ணங்கள் வங்களே. 6.5
3733 எங்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,
அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,
புங்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,
எங்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே. 6.6
3734 காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,
வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,
ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,
கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே. 6.7
3735 கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,
நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,
காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு,
ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே. 6.8
3736 ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது,
பேரிதழ் தாமரைக் கண்கனி வாயதோர்,
காரெழில் மேகத்தென் காட்கரை கோயில்கொள்,
சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே. 6.9
3737 வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்
பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 6.10
3738 கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,
கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல்,
வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்
முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. 6.11
3739 எங்கானல் அகங்கழிவாய்
இரைத்தேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய்.
திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங்
குடக்கூத்தர்க் கென்fதூதாய்,
நுங்கால்க ளென் தலைமேல்
கெழுமீரோ நுமரோடே. 7.1
3740 நுமரோடும் பிரியாதே
நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள்.
அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங்
கென்?தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத்
தக்கிலமே. கேளீரே. 7.2
3741 தக்கிலமே கேளீர்கள்
தடம்புனல்வாய் இரைதேரும்,
கொக்கினங்காள். குருகினங்காள்.
குளிர்மூழிக் களத்துறையும்,
செக்கமலத் தலர்போலும்
கண்கைகால் செங்கனிவாய்,
அக்கமலத் திலைபோலும்
திருமேனி யடிகளுக்கே. 7.3
3742 திருமேனி யடிகளுக்கு
தீவினையேன் விடுதூதாய்
திருமூழிக் களமென்னும்
செழுநகர்வாய் அணிமுகில்காள்,
திருமேனி யவட்கருளீர்
என்றக்கால், உம்மைத்தன்
திருமேனி யொளியகற்றித்
தெளிவிசும்பு கடியுமே? 7.4
3743 தெளிவிசும்பு கடிதோடித்
தீவளைத்து மின்னிலகும்,
ஒளிமுகில்காள். திருமூழிக்
களத்துறையும் ஒண்சுடர்க்கு,
தெளிவிசும்பு திருநாடாத்
தீவினையேன் மனத்துறையும்,
துளிவார்கட் குழலார்க்கென்
தூதுரைத்தல் செப்பமினே. 7.5
3744 தூதுரைத்தல் செப்புமின்கள்
தூமொழியாய் வண்டினங்காள்,
போதிரைத்து மதுநுகரும்
பொழில்மூழிக் களத்துறையும்,
மாதரைத்தம் மார்வகத்தே
வைத்தார்க்கென் வாய்மாற்றம்,
தூதுரைத்தல் செப்புதிரேல்
சுடர்வளையும் கலையுமே. 7.6
3745 சுடர்வளுயும் கலையுங்கொண்டு
அருவினையேன் தோள்துறந்த,
படர்புகழான் திருமூழிக்
களத்துறையும் பங்கயக்கட்,
சுடர்பவள வாயனைக்கடு
ஒருநாளோர் தூய்மாற்றம்,
படர்பொழில்வாய்க் குருகினங்காள்.
எனக்கொன்று பணியீரே. 7.7
3746 எனக்கொன்று பணியீர்கள்
இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,
மனக்கின்பம் படமேவும்
வண்டினங்காள். தும்பிகாள்,
கனக்கொள்திண் மதிள்புடைசூழ்
திருமூழிக் களத்துறையும்,
புனல்கொள்கா யாமேனிப்
பூந்துழாய் முடியார்க்கே. 7.8
3747 பூந்துழாய் முடியார்க்குப்
பொன்னாழி கையார்க்கு,
ஏந்துநீ ரிளங்குருகே.
திருமூழிக் களத்தார்க்கு,
ஏந்துபூண் முலைப்பயந்தென்
இணைமலர்க்கண் ணீர்ததும்ப,
தாம்தம்மைக் கொண்டகல்தல்
தகவன்றென் றுரையீரே. 7.9
3748 தகவன்றென் றுரையீர்கள்
தடம்புனல்வாய் இரைதேர்ந்து,
மிகவின்பம் படமேவும்
மென்னடைய அன்னங்காள்,
மிகமேனி மெலிவெய்தி
மேகலையும் ஈடழிந்து,என்
அகமேனி யொழியாமே
திருமூழிக் களத்தார்க்கே. 7.10
3749 ஒழிவின்றித் திருமூழிக்
களத்துறையும் ஒண்சுடரை,
ஒழிவில்லா அணிமழலைக்
கிளிமொழியாள் அலற்றியசொல்,
வழுவில்லா வண்குருகூர்ச்
சடகோபன் வாய்ந்துரைத்த,
அழிவில்லா ஆயிரத்திப்
பத்தும்நோய் அறுக்குமே. 7.11
3750 அறுக்கும் வினையா யின ஆகத்தவனை,
நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,
வெறித்தண் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
குறுக்கும் வகையுண்டு கொலொகொடி யேற்கே? 8.1
3751 கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 8.2
3752 எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 8.3
3753 நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 8.4
3754 மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 8.5
3755 கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி,
வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 8.6
3756 கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே. திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
ஆவா அடியா னிவன் என் றருளாயே. 8.7
3757 அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்
பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே யின்றியுன்னை என்னெஞ்சத் திருத்தும்,
தெருளே தருதென் திருநாவாய் என்தேவே. 8.8
3758 தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,
மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி,
தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,
யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ. 8.9
3759 அந்தோ. அணுகப் பெறுநாளென் றெப்போதும்,
சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,
கொந்தார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,
வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா. 8.10
3760 வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளனை,
திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,
பண்ணர் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,
மண்ணாண்டு மணம்கமழ் வர்மல்லிகையே. 8.11
3761 மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ.
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ.
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. 9.1
3762 புகலிடம் அறிகிலம் தமிய மாலோ.
புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ.
பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து
அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.2
3763 இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.3
3764 பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ.
வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ.
மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ.
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.4
3765 யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ.
ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ.
அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடை துணையென்னும் தோழி மாரும்
எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?
அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.5
3766 அவனுடை யருள்பெ றும்போ தரிதால்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை
சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ?
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.6
3767 ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்.
ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்fக ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு
பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.7
3768 புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ.
பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்
கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமன மல்லிகை மந்தக் கோவை
வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.8
3769 ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்.
அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து
பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம.
மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9
3770 மாலையும் வந்தது மாயன் வாரான்
மாமணி புலம்பல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ.
கொடியென குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள்
மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ.
என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.10
3771 அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா
அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி
அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த
ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்.
அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. 9.11
3772 மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட,
காலைமா லைகம லமலர் இட்டுநீர்,
வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரத்து,
ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே. 10.1
3773 கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை,
வெள்ளீயேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்
உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே. 10.2
3774 தொண்டர்.நுந் தந்துயர் போகநீர் ஏகமாய்,
விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கண்புரத்
தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே. 10.3
3775 மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை,
தேனைவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,
வானையுந் தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரம்,
தான் நயந் தபெரு மான் சர ணாகுமே. 10.4
3776 சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,
அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்,
தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே. 10.5
3777 அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன்,
நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரத்
தன்பன்,நா ளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 10.6
3778 மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம்,
பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம்,
செய்யில்வா ளையுக ளும்திருக் கண்ணபுரத்து
ஐயன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே. 10.7
3779 அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்,
மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே. 10.8
3780 பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி,
ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?,
வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்து
ஆதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே. 10.9
3781 இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?,
அல்லிமா தரம ரும்திரு மார்பினன்,
கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்
சொல்ல,நா ளும்துயர் பாடுசா ராவே. 10.10
3782 பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர்,
மாடநீ டுகுரு கூர்ச்சட கோபஞ்சொல்,
பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
பாடியா டிப்,பணி மினவன் தாள்களே. 10.11