திருவாய் மொழி நான்காம் பத்து

3123 ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்,
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ. 1.1

3124 உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்,
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ. 1.2

3125 அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ,
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ. 1.3

3126 நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ. 1.4

3127 பணிமின் திருவருள் என்னும்அஞ்சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ. 1.5

3128 வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ. 1.6

3129 ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே. 1.7

3130 குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ. 1.8

3131 படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. 1.9

3132 குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே. 1.10

3133 அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே. 1.11

3134 பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே. 2.1

3135 வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே. 2.2

3136 பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே. 2.3

3137 கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே. 2.4

3138 தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ க்
கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்,
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே. 2.5

3139 மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே. 2.6

3140 மடந்தையை வண்கம லத்திரு மாதினை,
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,
வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால், வாணுத லீர்.என் மடக்கொம்பே. 2.7

3141 கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். 2.8

3142 நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர்,
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? 2.9

3143 என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,
பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே. 2.10

3144 மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,
ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே. 2.11

3145 கோவை வாயாள் பொருட்டேற்றின்
எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய்.
குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப்
போதால் வணங்கே னேலும்,நின்
பூவை வீயாம் மேனிக்குப்
பூசும் சாந்தென் னெஞ்சமே. 3.1

3146 பூசும் சாந்தென் னெஞ்சமே
புனையும் கண்ணி எனதுடைய,
வாச கம்செய் மாலையே
வான்பட் டாடை யுமஃதே,
தேச மான அணிகலனும்
என்கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த
எந்தை யேக மூர்த்திக்கே. 3.2

3147 ஏக மூர்த்தி இருமூர்த்தி
மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி, ஐந்து பூதமாய்
இரண்டு சுடராய் அருவாகி,
நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாரா யணனே,உன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி
ஆவி யல்லல் மாய்த்ததே. 3.3

3148 மாய்த்தல் எண்ணி வாய்முலை
தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த, ஆய மாயனே.
வாம னனே மாதவா,
பூத்தண் மாலை கொண்டுன்னைப்
போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்
புனையும் கண்ணி எனதுயிரே. 3.4

3149 கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,
எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே,
நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே,
கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே. 3.5

3150 கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்,
ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று,
ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 3.6

3151 குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,
குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே,
விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே. 3.7

3152 என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே? 3.8

3153 உரைக்க வல்லேன் அல்லேனுன்
உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?
காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே.
பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன். 3.9

3154 யானும் ஏத்தி ஏழுலகும்
முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை
ஏத்த ஏத்த எங்கெய்தும்,
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்திப்ப,
யானு மெம்பி ரானையே
ஏத்தி னேன்யா னுய்வானே. 3.10

3155 உய்வு பாயம் மற்றின்மை
தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாம ரைப்பழனத்
தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே. 3.11

3156 மண்ணை யிருந்து துழாவி
வாமனன் மண்ணிது என்னும்,
விண்ணைத் தொழுதவன் மேவு
வைகுந்த மென்றுகை காட்டும்,
கண்ணையுள் நீர்மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னே.என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்
கென்செய்கேன் பெய்வளை யீரே 4.1

3157 பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
பிரான்கிடக் கும்கடல் என்னும்,
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச்
சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,
நையும்கண் ணீர்மல்க நின்று
நாரணன் என்னும்அ ன் னே,என்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறி யேனே. 4.2

3158 அறியும்செந் தீயைத் தழுவி
அச்சுதன் என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே. 4.3

3159 ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
நெடுமாலே. வா என்று கூவும்,
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தான் என் றாலும்,
என்றின மையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத் தையே. 4.4

3160 கோமள வான்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்,
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிடக் கையீ தென்னும்,
ஆமள வொன்றும் அறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற,
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே. 4.5

3161 கூத்தர் குடமெடுத் தாடில்
கோவிந்த னாம் எனா ஓடும்,
வாய்த்த குழலோசை கேட்கில்
மாயவன் என்றுமை யாக்கும்,
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,
பேய்ச்சி முலைசுவைத் தாற்கென்
பெண்கொடி யேறிய பித்தே. 4.6

3162 ஏறிய பித்தினோ டெல்லா
வுலகும்கண் ணன்படைப் பென்னும்
நீறுசெவ் வேயிடக் காணில்
நெடுமால் அடியார் என் றோடும்,
நாறு துழாய்மலர் காணில்
நாரணன் கண்ணியீ தென்னும்,
தேறியும் தேறாது மாயோன்
திறத்தன ளேயித் திருவே. 4.7

3163 திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்,
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந் தான் என்று துள்ளும்,
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக்f
கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.8

3164 விரும்பிப் பகைவரைக் காணில்
வியலிடம் உண்டானே. என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணன் என் றேறப் பறக்கும்,
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுளன் என்றுபின் செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே. 4.9

3165 அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,
பெயர்த்தும் கண் ணா. என்று பேசும்,
பெருமானே. வா. என்று கூவும்,
மயல்பெருங் காதலென் பேதைக்
கென்செய்கேன் வல்வினை யேனே. 4.10

3166 வல்வினை தீர்க்கும் கண்ணனை
வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல்
ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும்
தொழுதெழ வீற்றிருப் பாரே. 4.11

3167 வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,
ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,
போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,
ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே? 5.1

3168 மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்,
செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்,
வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. 5.2

3169 வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,
வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே. 5.3

3170 மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,
தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,
நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,
ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே. 5.4

3171 ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்
ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,
மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,
காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே. 5.5

3172 கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே? 5.6

3173 என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே? 5.7

3174 நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா
றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே? 5.8

3175 வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும், எண்டிசை யும்தவி
ராதுநின் றான்தன்னை,
கூனற்சங் கத்தடக் கையவனைக்
குடமாடியை வானக்
கோனைக், கவிசொல்ல வல்லேற்
கினிமா றுண்டோ ? 5.9

3176 உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
இடந்தும் கிடந்தும்நின்றும்,
கொண்ட கோலத் தொடுவீற்
றிருந்தும் மணங்கூடியும்,
கண்ட வாற்றால் தனக்கே
யுலகென நின்றான்தன்னை,
வண்தமிழ் நூற்க நோற்றேன்
அடியார்க் கின்பமாரியே. 5.10

3177 மாரி மாறாத தண்ணம்மலை
வேங்கடத் தண்ணலை,
வாரி வாறாத பைம்பூம்
பொழில்சூழ் குருகூர்நகர்,
காரி மாறன் சடகோபன்
சொல்லாயிரத் திப்பத்தால்,
வேரி மாறாத பூமே
லிருப்பாள் வினைதீர்க்குமே. 5.11

3178 தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம்
நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்
னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை
வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை
துழாய்த்திசைக் கின்றதே. 6.1

3179 திசைக்கின்ற தேயிவள் நோயிது
மிக்க பெருந்தெய்வம்,
இசைப்பின்றி நீரணங் காடும்
இளந்தெய்வம் அன்றிது,
திசைப்பின்றி யேசங்கு சக்கர
மென்றிவள் கேட்க,நீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில்
பெறுமிது காண்மினே. 6.2

3180 இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு
விச்சிசொற் கொண்டு,நீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும்
இறைச்சியும் தூவேல்மின்,
மதுவார் துழாய்முடி மாயப்
பிரான்கழல் வாழ்த்தினால்,
அதுவே யிவளுற்ற நோய்க்கும்
அருமருந் தாகுமே. 6.3

3181 மருந்தாகும் என்றங்கோர் மாய
வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்
களனிழைத் தென்பயன்?
ஒருங்காக வேயுல கேழும்
விழுங்கி உமிழ்ந்திட்ட,
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில்
இவளைப் பெறுதிரே. 6.4

3182 இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,
கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,
தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே. 6.5

3183 தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்,
பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்,
மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு,
அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே. 6.6

3184 அணங்குக் கருமருந் தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய்
துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே. 6.7

3185 வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. 6.8

3186 கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,
நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே. 6.9

3187 உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே. 6.10

3188 தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்
வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,
தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே. 6.11

3189 சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,
ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,
காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே. 7.1

3190 கொள்ள மாளா இன்ப
வெள்ளம் கொதில தந்திடும்,என்
வள்ள லேயோ. வையங் கொண்ட
வாமனா வோ. என்றென்று,
நள்ளி ராவும் நண்பகலும்
நானிருந் தோலமிட்டால்,
கள்ள மாயா. உன்னை
யென்கண் காணவந் தீயாயே. 7.2

3191 ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்,
பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே. 7.3

3192 காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ,
ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று,
நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்,
பேணி வானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே? 7.4

3193 அப்ப னே.அட லாழியானே,
ஆழ்கட லைக்கடைந்த
துப்ப னே,உன் தோள்கள்
நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,
எப்பொ ழுதும் கண்ண
நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,
இப்போ ழுதே வந்தி
டாயென் றேழையேன் நோக்குவனே. 7.5

3194 நோக்கி நோக்கி உன்னைக்
காண்பான் யானென தாவியுள்ளே,
நாக்கு நீள்வன் ஞான
மில்லை நாடோ று மென்னுடைய,
ஆக்கை யுள்ளூ மாவி
யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,
நீக்க மின்றி யெங்கும்
நின்றாய். நின்னை யறிந்தறிந்தே. 7.6

3195 அறிந்த றிந்து தேறித்
தேறி யானென தாவியுள்ளே,
நிறைந்த ஞான மூர்த்தி
யாயை நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும் நின்றிடறும்
பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
நறுந்து ழாயின் கண்ணி
யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே. 7.7

3196 கண்டு கொண்டென் கைக ளார
நின்திருப் பாதங்கள்மேல்,
எண்டி சையு முள்ள
பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,
தொண்ட ரோங்கள் பாடி
யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,
வண்டு ழாயின் கண்ணி
வேந்தே. வந்திட கில்லாயே. 7.8

3197 இடகி லேனோன் றட்ட
கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,
கடவ னாகிக் காலந்
தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,
மடவன் நெஞ்சம் காதல்
கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,
தடவு கின்றே னெங்குக்
காண்பன் சக்கரத் தண்ணலையே? 7.9

3198 சக்க ரத்தண் ணலேயென்று
தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்ற
லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி
யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க
ளாலே கண்டு தழுவுவனே. 7.10

3199 தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,
குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்
வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,
தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே. 7.11

3200 ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. 8.1

3201 மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,
அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. 8.2

3202 மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. 8.3

3203 நிறையினாற் குறைவில்லா
நெடும்பணைத்தோள் மடப்பின்னை,
பொறையினால் முலையணைவான்
பொருவிடைஏழ் அடர்த்துகந்த,
கறையினார் துவருடுக்கை
கடையாவின் கழிகோல்கை,
சறையினார் கவராத
தளிர்நிறத்தால் குறைவிலமே. 8.4

3204 தளிர்நிறத்தால் குறைவில்லாத்
தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக்
கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல்
கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத
அறிவினால் குறைவிலமே. 8.5

3205 அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. 8.6

3206 கிளரொளியால் குறைவில்லா
அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன
தகல்மார்பம் கிழிந்துகந்த,
வளரொளிய கனலாழி
வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத
வரிவளையால் குறைவிலமே. 8.7

3207 வரிவளையால் குறைவில்லாப்
பெருமுழக்கால் அடங்காரை,
எரியழலம் புகவூதி
யிருநிலமுன் துயர்தவிர்த்த,
தெரிவரிய சிவன்பிரமன்
அமரர் கோன் பணிந்தேத்தும்,
விரிபுகழான் கவராத
மேகலையால் குறைவிலமே. 8.8

3208 மேகலையால் குறைவில்லா
மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை
விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான்போல்
உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத
வுடம்பினால் குறைவிலமே. 8.9

3209 உடம்பினால் குறைவில்லா
உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா
அசுரர் குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன்
தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே. 8.10

3210 உயிரினால் குறைவில்லா
உலகேழ்தன் உள்ளொடுக்கி,
தயிர்வெண்ணெ யுண்டானைத்,
தடங்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் லிசைமாலை
யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து
வைகுந்தம் நண்ணுவரே. 8.11

3211 நண்ணாதார் முறுவலிப்ப
நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும்
இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா. கடல்கடைந்தாய்.
உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவா தடியேனைப்
பணிகண்டாய் சாமாறே. 9.1

3212 சாமாறும் கெடுமாறும்
தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும்
இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான்
அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய்
அடியேனைக் குறிக்கொண்டே. 9.2

3213 கொண்டாட்டும் குலம்புனைவும்
தமருற்றார் விழுநிதியும்,
வண்டார்பூங் குழலாளும்
மனையொழிய வுயிர்மாய்தல்,
கண்டாற்றேன் உலகியற்கை
கடல்வண்ணா. அடியேனைப்
பண்டேபோல் கருதாதுன்
அடிக்கேகூய்ப் பணிகொள்ளே. 9.3

3214 கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும்
இவையென்ன உலகியற்கை?
வள்ளலே. மணிவண்ணா.
உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை
உனதருளால் வாங்காயே. 9.4

3215 வாங்குநீர் மலருலகில்
நிற்பனவுமீ திரிவனவும்,
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப்
பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,
ஈங்கிதன்மேல் வெந்நரகம்
இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா.
அடியேனை மறுக்கேலே. 9.5

3216 மறுக்கிவல் வலைப்படுத்திக்
குமைத்திட்டுக் கொன்றுண்பர்,
அறப்பொருளை யறிந்தோரார்
இவையென்ன உலகியற்கை?
வெறித்துளவ முடியானே.
வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய், இனியென்னா
ரமுதே.கூய் அருளாயே. 9.6

3217 ஆயே.இவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்,
நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்,
கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே. 9.7

3218 காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,
ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,
கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,
கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே? 9.8

3219 கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும்
தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய்.
அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன்
திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள்
கூட்டினைநான் கண்டேனே. 9.9

3220 கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே. 9.10

3221 திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே. 9.11

3222 ஒன்றுந் தேவு முலகும்
உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னொடு
தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம் போல்மணி மாடம்
நீடு திருக்குரு கூரதனுள்,
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
மற்றைத் தெய்வம் நாடுதிரே. 10.1

3223 நாடி நீர்வ ணங்கும்
தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,
வீடில் சீர்ப்புக ழாதிப்பி
ரானவன் மேவி யுறைகோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனைப்,
பாடி யாடிப் பரவிச்
செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. 10.2

3224 பரந்த தெய்வமும் பல்லுல
கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி
டந்தது கண்டும் தெளியகில்லீர்,
சிரங்க ளால்அ மரர்வ
ணங்கும் திருக்குரு கூரதனுள்,
பரன்திற மன்றிப் பல்லுலகீர்.
தெய்வம் மற்றில்லை பேசுமினே. 10.3

3225 பேச நின்ற சிவனுக்
கும்பிர மன்தனக் கும்பிறர்க்கும்
நாய கனவ னே,க
பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின்,
தேச மாமதிள் சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனுள்,
ஈசன் பாலோர் அவம்ப
றைதலென் னாவதி லிங்கியர்க்கே? 10.4

3226 இலிங்கத் திட்ட புராணத்
தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய் வீர்களும்
மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி
வீசும் திருக்குரு கூரதனுள்,
பொலிந்து நின்றபி ரான்கண்டீ
ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. 10.5

3227 போற்றி மற்றோர் தெய்வம்
பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும்
வீடு பெற்றாலுல கில்லையென்றே,
சேற்றில் செந்நெல் கமலம்
ஓங்கு திருக்குரு கூரதனுள்,
ஆற்ற வல்லவன் மாயம்
கண்டீரது அறிந்தறிந் தோடுமினே. 10.6

3228 ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,
பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்,
கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்,
ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே. 10.7

3229 புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவனை
நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது
நாராயணனருளே
கொக்கலர் தடந்f தாழை வேலித்
திருக்குருகூரதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் விளம்புதிரே 10.8

3230 விளம்பும் ஆறு சமய
மும்அ வை யாகியும் மற்றும்தன்பால்,
அளந்து காண்டற் கரிய
னாகிய ஆதிப்பி ரானமரும்,
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனை,
உளங்கொள் ஞானத்து வைம்மின்
உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 10.9

3231 உறுவ தாவ தெத்தேவும்
எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,
மறுவில் மூர்த்தியோ டொத்தித்
தனையும் நின்றவண் ணம்நிற்கவே,
செறுவில் செந்நெல் கரும்பொ
டோ ங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய
நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே. 10.10

3232 ஆட்செய்த தாழிப்பி ரானைச்
சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
நாட்க மழ்மகிழ் மாலை
மார்பினன் மாறன் சடகோபன்,
வேட்கை யால்சொன்ன பாடல்
ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,
மீட்சி யின்றி வைகுந்த
மாநகர் மற்றது கையதுவே. 10.11