மூன்றாம் பத்து
1148 இருந்தண் மாநில மேனம தாய்வளைமருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம்
பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு
திருவயிந் திரபுரமே.
1.1
1149 மின்னு மாழியங் கையவன் செய்யவள்
உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய
பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப்
பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு
திருவயிந் திரபுரமே.
1.2
1150 வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்
மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம்
முயங்கிய முல்லையங்
கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு
திருவயிந் திரபுரமே.
1.3
1151 மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்
மார்பக மிருபிளவா,
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்
கொடுத்தவ னிடம்,மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை
விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்
திருவயிந் திரபுரமே.
1.4
1152 ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்
பொன்மலர் திகழ்,வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு
திருவயிந் திரபுரமே.
1.5
1153 கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்
திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத்
தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை
மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய
திருவயிந் திரபுரமே.
1.6
1154 மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன
திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்
பெடையொடு மினிதமர,
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்
திருவயிந் திரபுரமே.
1.7
1155 விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்
வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்
நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே.
1.8
1156 வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில்
விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம்
குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே.
1.9
1157 மூவ ராகிய வொருவனை மூவுல
குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்
திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி
கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்
பாவங்கள் பயிலாவே.
1.10
1158 ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு
உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா
தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே
கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.1
1159 காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் _கர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா
திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து
மென்பீர், வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.2
1160 வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய்
விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த,
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.3
1161 அருமா நிலமன் றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்.
கருமா கடலுள் கிடந்தா னுவந்து
கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,
திருமால் திருமங் கையொடாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.4
1162 கோமங்க வங்கக் கடல்வைய முய்யக்
குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,
தாமங் கமருள் படைதொட்ட வென்றித்
தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்
புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.5
1163 நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
துணியப் பணிகொண் டணியார்ந்து,இலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம்
மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான்
அருமா மறையந் தணர்சிந் தைபுக,
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.6
1164 மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து
மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு
திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.7
1165 மாவாயி னங்கம் மதியாது கீறி
மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன்
குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,
மூவா யிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.8
1166 செருநீல வேற்கண் மடவார் திறத்துச்
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,
அருநீல பாவ மகலப் புகழ்சேர்
அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,
பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்
வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2.9
1167 சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத்
திருசித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,
ஆராத வுள்ளத் தவர்க்கேட் டுவப்ப
அலைநீ ருலகுக் கருளே புரியும்,
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா
ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்,
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப்
பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே.
2.10
1168 வாட மருதிடை போகி
மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு,
ஆடல்நல் மாவுடைத் தாயர்
ஆநிரைக் கன்றிடர்
தீர்ப்பான், கூடிய மாமழை காத்த
கூத்த னெனெவரு கின்றான்,
சேடுயர் பூம்பொழில் தில்லைச்
சித்திர கூடத்துள் ளானே.
3.1
1169 பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
பிள்ளை பரிசிது வென்றால்,
மாநில மாமகள் மாதர்
கேள்வ னிவனென்றும், வண்டுண்
பூமகள் நாயக னென்றும்
புலங்கெழு கோவியர் பாடி,
தேமலர் தூவ வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.2
1170 பண்டிவன் வெண்ணெயுண் டானென்
றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க
இணைமரு தூடு நடந்திட்டு,
அண்டரும் வானத் தவரு
மாயிர நாமங்க ளோடு,
திண்டிறல் பாட வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.3
1171 வளைக்கை நெடுங்கண் மடவா
ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தண்தடம் புக்கண்டர் காண,
முளைத்த எயிற்றழல் நாகத்
துச்சியில் நின்றது வாட,
திலைத்தமர் செய்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.4
1172 பருவக் கருமுகி லொத்து
முட்டுடை மாகட லொத்து,
அருவித் திரள்திகழ் கின்ற
வாயிரம் பொன்மலை யொத்து,
உருவக் கருங்குழ லாய்ச்சி
திறத்தின மால்விடை செற்று,
தெருவில் திளைத்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.5
1173 எய்யச் சிதைந்த திலங்கை
மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி
ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க
அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.6
1174 ஆவ ரிவைசெய் தறிவார்?
அஞ்சன மாமலை போலே,
மேவு சினத்தடல் வேழம்
வீழ முனிந்து,அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார்
கைதிழ வீதி வருவான்,
தேவர் வணங்குதண் தில்லைச்
சித்திர கூடத்துள் ளானே.
3.7
1175 பொங்கி யமரி லொருகால்
பொன்பெய ரோனை வெருவ,
அங்கவனாக மளைந்திட்
டாயிரந் தோளெழுந் தாட,
பைங்க ணிரண்டெரி கான்ற
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,
சிங்க வுருவில் வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.8
1176 கருமுகில் போல்வதோர் மேனி
கையன வாழியும் சங்கும்,
பெருவிறல் வானவர் சூழ
ஏழுல கும்தொழு தேத்த,
ஒருமக ளாயர் மடந்தை
யொருத்தி நிலமகள், மற்றைத்
திருமக ளோடும் வருவான்
சித்திர கூடத்துள் ளானே.
3.9
1177 தேனமர் பூம்பொழில் தில்லைச்
சித்திர கூட மமர்ந்த,
வானவர் தங்கள் பிரானை
மங்கையர் கோன்மரு வார்,
ஊனமர் வேல்கலி கன்றி
யொண்டமி ழொன்பதோ டொன்றும்,
தானிவை கற்றுவல் லார்மேல்
சாராதீவினைதானே.
3.10
1178 ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி
உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்
அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.1
1179 நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை
ஒளிமலர்ச்கே வடியணைவீர், உழுசே யோடச்
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத்
தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க,
தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.2
1180 வையணைந்த _திக்கோட்டு வராக மொன்றாய்
மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள்
நேர்ந்தவந்தா ளணைகிற்பீர், நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்
மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,
செய்யணைந்து களைகளையா தேறும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.3
1181 பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்
பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட
நின்மலந்தா ளணைகிற்பீர், நீல மாலைத்
தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே
தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,
செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.4
1182 தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட
விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட
அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.5
1183 பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப்
படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை,
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த
விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்
துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.6
1184 பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்
புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்
திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த்
தெள்கி மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி
வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.7
1185 பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்
பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்
தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.8
1186 பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்
தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்
சீராம விண்ணகரே சேர்மி னீரே.
4.9
1187 செங்கமலத் தயனனைய மறையோர் காழிச்
சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன்
அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்
தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே.
4.10
1188 வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே. 5.1
1189 நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல், அரவணை
வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து, எங்கும்
ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே. 5.2
1190 நென்னல்போய் வருமென்றென் றெண்ணி யிராமையென் மனத்தே புகுந்தது,
இம்மைக் கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்,
செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார் முகத்தெழு வாளைபோய், கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே. 5.3
1191 மின்னில் மன்னு _டங்கிடை மடவார்தம் சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில் வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே. 5.4
1192 நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்தும், என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,
பாட லின்னொலி சங்கி நோசை பரந்து பல்பணை யால்மலிந்து, எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே. 5.5
1193 கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர் சேவடி
கைதொழுதெழும், புந்தியேன் மனத்தே புகுந்தாயைப்
போகலொட்டேன்,
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே. 5.6
1194 உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன் அடியேன் மனம்புகுந்த,அப்
புலவ. புண்ணிய னே.புகுந் தாயைப் போகலொட்டேன்,
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல் தண்டாமரை மலரின் மிசை,மலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே. 5.7
1195 சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி இன்னிள வண்டு போய்,இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. 5.8
1196 ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி நின்னடைந் தேற்கு,ஒரு பொருள்
வேதியா. அரையா.உரையாய் ஒருமாற்றமெந்தாய்,
நீதி யாகிய வேதமா முனியாளர் தோற்ற முரைத்து, மற்றவர்க்
காதியாய் இருந்தாய். அணியாலி யம்மானே. 5.9
1197 புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே. 5.10
1198 தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே. 6.1
1199 பிணியவிழு நறுநீல
மலர்க்கிழியப் பெடையோடும்,
அணிமலர்மேல் மதுநுகரும்
அறுகால சிறுவண்டே,
மணிகெழுநீர் மருங்கலரும்
வயலாலி மணவாளன்,
பணியறியேன் நீசென்றென்
பயலைநோ யுரையாயே.
6.2
1200 நீர்வானம் மண்ணெரிகா
லாய்நின்ற நெடுமால்,தன்
தாராய நறுந்துளவம்
பெருந்தகையெற் கருளானே,
சீராரும் வளர்ப்பொழில்சூழ்
திருவாலி வயல்வாழும்,
கூர்வாய சிறுகுருகே.
குறிப்பறிந்து கூறாயே.
6.3
1201 தானாக நினையானேல்
தன்னினைந்து நைவேற்கு,ஓர்
மீனாய கொடிநெடுவேள்
வலிசெய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே.
திருவாலி நகராளும்,
ஆனாயற் கென்னுறுநோ
யறியச்சென் றுரையாயே.
6.4
1202 வாளாய கண்பனிப்ப
மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து
நைவேற்கு,ஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை
நகராளா வரையெடுத்த
தோளாளா, என்றனக்கோர்
துணையாள னாகாயே.
6.5
1203 தாராய தண்டுளவ
வண்டுழுத வரைமார்பன்,
போரானைக் கொம்பொசித்த
புட்பாக னென்னம்மான்,
தேராரும் நெடுவீதித்
திருவாலி நகராளும்,
காராயன் என்னுடைய
கனவளையும் கவர்வானோ.
6.6
1204 கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல்
குலவரைபோல்,
பண்டரவி னணைக்கிடந்து
பாரளந்த
பண்பாளா,
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ்
வயலாலி மைந்தா,என்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
கனவளையும் கடவேனோ.
6.7
1205 குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்
தண்குடந்தைக் குடமாடி,
துயிலாத கண்ணிணையேன்
நின்னினைந்து துயர்வேனோ,
முயலாலு மிளமதிக்கே
வளையிழந்தேற்கு, இதுநடுவே
வயலாலி மணவாளா.
கொள்வாயோ மணிநிறமே.
6.8
1206 நிலையாளா நின்வணங்க
வேண்டாயே யாகினும்,என்
முலையாள வொருநாளுன்
னகலத்தால் ஆளாயே,
சிலையாளா மரமெய்த
திறலாளா திருமெய்ய
மலையாளா, நீயாள
வளையாள மாட்டோமே.
6.9
1207 மையிலங்கு கருங்குவளை
மருங்கலரும் வயலாலி,
நெய்யிலங்கு சுடராழிப்
படையானை நெடுமாலை,
கையிலங்கு வேல்கலியன்
கண்டுரைத்த தமிழ்மாலை,
ஐயிரண்டு மிவைவல்லார்க்
கருவினைக ளடையாவே.
6.10
1208 கள்வன்கொல் யானறியேன்
கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன்
மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப்
பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி
யணியாலி புகுவர்க்கொலோ.
7.1
1209 பண்டிவ னாயன்நங்காய்.
படிறன்புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்
நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்
கெண்டையொண் கண்மிளிரக்
கிளிபோல்மிழற்
றிநடந்து, வண்டமர் கானல்மல்கும்
வயலாலி புகுவர்க்கொலோ.
7.2
1210 அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்.
அரக்கர்க்குலப் பாவைதன்னை,
வெஞ்சின மூக்கரிந்த
விறலோந்திறங் கேட்கில்,மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம்
பணைத்தோளி பரக்கழிந்து,
வஞ்சியந் தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ.
7.3
1211 ஏதுஅவன் தொல்பிறப்பு
இளைய வன்வளை யூதி,மன்னர்
தூதுவ னாயவனூர்
சொலுவீர்கள்.சொலீரறியேன்,
மாதவன் தந்துணையா
நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,
போதுவண் டாடுசெம்மல்
புனலாலி புகுவர்க்கொலோ.
7.4
1212 தாயெனை யென்றிரங்காள்
தடந்தோளி தனக்கமைந்த,
மாயனை மாதவனை
மதித்தென்னை யகன்றைவள்,
வேயன தோள்விசிறிப்
பெடையன்ன மெனநடந்து,
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர்க்கொலோ.
7.5
1213 எந்துணை யென்றெடுத்தேற்
கிறையேனு மிரங்கிற்றிலள்,
தன்துணை யாயவென்றன்
தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய்
வரஞ்செற்றரங் கத்துறையும்,
இந்துணை வன்னொடும்போ
யெழிலாலி புகுவர்க்கொலோ.
7.6
1214 அன்னையு மத்தனுமென்
றடியோமுக் கிரங்கிற்றிலள்,
பின்னைதன் காதலன்றன்
பெருந்தோள்நலம் பேணினளால்,
மின்னையும் வஞ்சியையும்
வென்றிலங்கு மிடையாள்நடந்து,
புன்னையும் அன்னமும்சூழ்
புனலாலி புகுவர்க்கொலோ.
7.7
1215 முற்றிலும் பைங்கிளியும்
பந்துமூசலும் பேசுகின்ற,
சிற்றில்மென் பூவையும்விட்
டகன்றசெழுங் கோதைதன்னை,
பெற்றிலேன் முற்றிழையைப்
பிறப்பிலிபின் னேநடந்து,
மற்றெல்லாம் கைதொழப்போய்
வயலாலி புகுவர்க்கொலோ.
7.8
1216 காவியங் கண்ணியெண்ணில்
கடிமாமலர்ப் பாவையொப்பாள்,
பாவியேன் பெற்றமையால்
பணைத்தோளி பரக்கழிந்து,
தூவிசே ரன்னமன்ன
நடையாள்நெடு மாலொடும்போய்,
வாவியந் தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ.
7.9
1217 தாய்மனம் நின்றிரங்கத்
தனியேநெடு மால்துணையா,
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவரென்று,
காய்சின வேல்கலிய
னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,
மேவிய நெஞ்சுடையார்
தஞ்சமாவது விண்ணுலகே.
7.10
1218 நந்தா விளக்கே அளத்தற் கரியாய்.
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று
இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே
களிவண் டுமிழற் றநிழல்
துதைந்து, மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.1
1219 முதலைத் தனிமா முரண்தீர வன்று
முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,
விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி
வினைதீர்த்த வம்மானிடம்,விண்ணணவும்
பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப்
பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,
மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.2
1220 கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்
இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ
டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி
மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.3
1221 சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்
கறையார் நெடுவே லரக்கர் மடியக்
கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,
மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.4
1222 இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு
இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,
தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத்
தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,
குழையாட வல்லிக் குலமாடமாடே
குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்,
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.5
1223 பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப்
பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும்
உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக்
கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,
மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.6
1224 தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத்
தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,
இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல்
அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம்
திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.7
1225 துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா
விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம்
விளைவித்த வம்மானிடம்,வேல் நெடுங்கண்
முளைவாளெயிற்று மடவார் பயிற்று
மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல்,
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.8
1226 விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த
விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்,
படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்
பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத்
தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங்
கழுநீர், மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.
8.9
1227 வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர்
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்
கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
கண்டார் வணங்கக் களியானை மீதே
கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,
விண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
விரிநீ ருலகாண் டுவிரும் புவரே.
8.10
1228 சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.1
1229 திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப,இரணியனை
நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.2
1230 அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு
திரியும், முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.3
1231 கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்
காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,
தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்
செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,
மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.4
1232 மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந்
தெங்கும், மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.5
1233 பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா,
பெரிய வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.6
1234 விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,
இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்
ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,
வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.7
1235 ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்,
கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை
கோயில், மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப,
மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.8
1236 வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,
எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்
சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து,
மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
9.9
1237 சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும்
தாமரைக்கண் நெடியபிரான் தானமரும்
கோயில், வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,
மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய
வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.
9.10
1238 திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்க் கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.1
1239 வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும்
விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று
குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில்,
என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.2
1240 உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த,
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப்
பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல்,
அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.3
1241 ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப்
பற்றி, வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக்
கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.4
1242 கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு,
அண்டமுமிவ் வலைகடலு அளந்தபிரா னமருமிடம்
வளங்கொள்பொழி லயலே, அண்டமுறு முழவொலியும்
வண்டினங்க ளொலியும் அருமறையி னொலியும்மட
வார்சிலம்பி னொலியும், அண்டமுறு மலைகடலி
னொலிதிகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே.
10.5
1243 வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர,
தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு
முத்தம், வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.6
1244 தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான்,
காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி,
நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று,அங்
காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.7
1245 கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன்
காப்பான், குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ
புரங்கள், துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை,
அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.8
1246 வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு துண்டு,வலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிசந் தகில்கனக
முந்தி, மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
10.9
1247 சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில்,
அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை,
கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும்,
ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத்
துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே.
10.10