ஏழாம் பத்து

1548 கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. 1.1

1549 வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,
பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 1.2

1550 தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே 1.3

1551 புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே 1.4

1552 வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,
நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 1.5

1553 பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 1.6

1554 கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,
நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே,
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்
கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 1.7

1555 அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. 1.8


1556 தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,
தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,
ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட
வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 1.9

1557 வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்
தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,
தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே 1.10

1558 புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. 2.1

1559 ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா, பாடேன்
தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. 2.2

1560 எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,
அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,
நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே 2.3

1561 சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்
உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்
அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ 2.4

1562 நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,
ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,
பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்,
நாணதா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ 2.5

1563 எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,
அந்தோ.என் னாருயிரே. அரசே அருளெனக்கு
நந்தாமல் தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ 2.6

1564 மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,
என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,
வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன்,
நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ 2.7

1565 எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ 2.8

1566 ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த
தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ 2.9

1567 நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே 2.10

1568 சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்
மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென்
கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே.
3.1

1569 தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும்
தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக்
காய்நி னைந்தருள் செய்யு மப்பனை
அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட
வாய னை,மக ரக்குழைக் காதனை
மைந்த னைமதிள் கோவ லிடைகழி
யாயனை,அம ரர்க்கரி யேற்றையென்
அன்ப னையன்றி யாதரி யேனே
3.2

1570 வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான்
மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச்
சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச்
சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன்,
கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக்
கோவி னைக்குட மாடிய கூத்தனை,
எந்தை யையெந்தை தந்தைதம் மானை
எம்பி ரானையெத் தால்மறக் கேனே?
3.3

1571 உரங்க ளாலியன் றமன்னர் மாளப்
பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்
எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி
ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக்
கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே
3.4

1572 ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ
தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து
தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி
எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற,
வேங்கடத்தரி யைப்பரி கீறியை
வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட
தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை
அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே
3.5

1573 எட்ட னைப்பொழு தாகிலு மென்றும்
என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,
தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின்
தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்
கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக்
காத லால்மறை நான்குமுன் னோதிய
பட்ட னை,பர வைத்துயி லேற்றையென்
பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே
3.6

1574 பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற
பாலை யாகி யிங்கே புகுந்து,என்
கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான்
கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,
விண்ணு ளார்பெரு மானையெம் மானை
வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்
வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல்
வண்ண மேயன்றி வாயுரை யாதே
3.7

1575 இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக்
கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்
துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர்
தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்
முனியை வானவ ரால்வணங் கப்படும்
முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்
கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட
கள்வ னையின்று கண்டுகொண் டேனே
3.8

1576 என்செய் கேனடி னேனுரை யீர் இதற்
கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்
நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
அன்றி யென்மனம் போற்றியென் னாதே
3.9

1577 தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
தோன்றல் வாள்கலி யன்திரு வாலி
நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன்
நல்ல மாமலர் சேவடி, சென்னியில்
சூடி யும்தொழு துமெழுந் தாடியும்
தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.
3.10

1578 கண்சோர வெங்குருதி வந்திழிய
வெந்தழல்போல் கூந்த லாளை,
மண்சேர முலையுண்ட மாமதலாய்.
வானவர்தம் கோவே. என்று,
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு
மணிமாட மல்கு, செல்வத்
தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார்
காண்மினென் தலைமே லாரே.
4.1

1579 அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை
வரையகலத் தமர்ந்து, மல்லல்
கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று
கொண்டெறிந்த கூத்தர் போலாம்,
வம்பலரும் தண்சோலை வண்சேறை
வானுந்து கோயில் மேய,
எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும்
என்மனத்தே யிருக்கின் றாரே
4.2

1580 மீதோடி வாளெயிறு மின்னிலக
முன்விலகு முருவி னாளை
காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த
கைத்தலத்தா. என்று நின்று,
தாதோடு வண்டலம்பும் தண்சேறை
எம்பெருமான் தாளை யேத்தி,
போதோடு புனல்தூவும் புண்ணியரே
விண்ணவரில் பொலிகின் றாரே
4.3

1581 தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை
வெஞ்சமத்துப் பொன்றி வீழ,
போராளும் சிலையதனால் பொருகணைகள்
போக்குவித்தாய் என்று, நாளும்
தாராளும் வரைமார்பன் தண்சேறை
எம்பெருமா னும்ப ராளும்,
பேராளன் பேரோதும் பெரியோரை
ஒருகாலும் பிரிகி லேனே
4.4

1582 வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின்
வல்லமணர் தமக்கு மல்லேன்,
முந்திசென் றரியுருவா யிரணியனை
முரணழித்த முதல்வர்க் கல்லால்,
சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை
எம்பெருமான் தாளை, நாளும்
சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி
எப்பொழுதும் தித்திக் கும்மே
4.5

1583 பண்டேன மாயுலகை யன்றிடந்த
பண்பாளா. என்று நின்று,
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
துணையில்லேன் சொல்லு கின்றேன்,
வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை
எம்பெருமா னடியார் தம்மை,
கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம்
கண்ணிணையும் களிக்கு மாறே
4.6

1584 பைவிரியும் வரியரவில் படுகடலுள்
துயிலமர்ந்த பண்பா. என்றும்,
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே.
என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்
திருவடியை சிந்தித் தேற்கு,என்
ஐயறிவும் கொண்டானுக் காளானார்க்
காளாமென் அன்பு தானே
4.7

1585 உண்ணாது வெங்கூற்றம் ஓவாது
பாவங்கள் சேரா, மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்
மென்தளிர்போ லடியி னானை,
பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ்
தண்சேறை யம்மான் றன்னை,
கண்ணாரக் கண்டுருகிக் கையாரத்
தொழுவாரைக் கருதுங் காலே
4.8

1586 கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால்
போதொருகால் கவலை யென்னும்,
வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள்
கருநீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை
எம்பெருமான் தாளை, நாளும்
உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர்
என்னுள்ள முருகு மாறே
4.9

1587 பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து
வயல்நின்ற பெடையோடு, அன்னம்
தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்
தண்சேறை யம்மான் றன்னை,
வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கொண்டு தொண்டீர்,
தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும்
துணைக்கையால் தொழுது நின்றே.
4.10

1588 தந்தை காலில் பெருவி
லங்கு தாளவிழ, நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார்
மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும்
மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும்
அணியார் வீதி அழுந்தூரே.
5.1

1589 பாரித் தெழுந்த படைமன்னர்
தம்மை யாள, பாரதத்துத்
தேரில் பாக னாயூர்ந்த
தேவ தேவ னூர்போலும்,
நீரில் பணைத்த நெடுவாளைக்
கஞ்சிப் போன குருகினங்கள்,
ஆரல் கவுளோ டருகணையும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே
5.2

1590 செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்
கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,
உம்பர் வாளிக் கிலக்காக
உதிர்த்த வுரவோ னூர்போலும்,
கொம்பி லார்ந்த மாதவிமேல்
கோதி மேய்ந்த வண்டினங்கள்,
அம்ப ராவும் கண்மடவார்
ஐம்பா லணையும் அழுந்தூரே
5.3

1591 வெள்ளத் துள்ளோ ராலிலைமேல்
மேவி யடியேன் மனம்புகுந்து,என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும்
நின்றார் நின்ற வூர்போலும்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்
போன காதல் பெடையோடும்,
அள்ளல் செறுவில் கயல்நாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே
5.4

1592 பகலு மிரவும் தானேயாய்ப்
பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி
நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும்
துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும்
அணியார் வீதி அழுந்தூரே
5.5

1593 ஏடி லங்கு தாமரைபோல்
செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து
நின்றார் நின்றா வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம்
போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா
அணியார் வீதி அழுந்தூரே
5.6

1594 மாலைப் புகுந்து மலரணைமேல்
வைகி யடியேன் மனம்புகுந்து,என்
நீலக் கண்கள் பனிமல்க
நின்றார் நின்ற வூர்போலும்
வேலைக் கடல்போல் நெடுவீதி
விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,
ஆலைப் புகையால் அழல்கதிரை
மறைக்கும் வீதி அழுந்தூரே
5.7

1595 வஞ்சி மருங்கு லிடைநோவ
மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி
நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற்
பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா
அணியார் வீதி அழுந்தூரே
5.8

1596 என்னைம் புலனு மெழிலுங்கொண்
டிங்கே நெருந லெழுந்தருளி
பொன்னங் கலைகள் மெலிவெய்தப்
போன புனித ரூர்போலும்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட
அன்னம் பெடையோ டுடனாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே
5.9

1597 நெல்லில் குவளை கண்காட்ட
நீரில் குமுதம் வாய்காட்ட,
அல்லிக் கமலம் முகங்காட்டும்
கழனி யழுந்தூர் நின்றானை,
வல்லிப் பொதும்பில் குயில்கூவும்
மங்கை வேந்தன் பரகாலன்,
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை
சொல்லப் பாவம் நில்லாவே.
5.10

1598 சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. 6.1

1599 கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே 6.2

1600 உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே 6.3

1601 குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 6.4

1602 கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே 6.5

1603 பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 6.6

1604 திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே 6.7

1605 நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே 6.8

1606 பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. 6.9

1607 திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. 6.10

1608 திருவுக் கும்திரு வாகிய செல்வா.
தெய்வத் துக்கர சே.செய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே.
உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்
உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.1

1609 பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்
மால்வண் ணா.மழை போலொளி வண்ணா,
சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா.
சாம வேதிய னே.நெடு மாலே,
அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.2

1610 நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்
நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்
செய்யா தவுல கத்திடைச் செய்தாய்
சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்
போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்
ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.3

1611 பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன்
பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே, மாதவ னே.மது சூதா.
மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்
நரனே. நாரண னே.திரு நறையூர்
நம்பீ. எம்பெரு மான்.உம்ப ராளும்
அரனே, ஆதிவ ராகமுன் னானாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.4

1612 விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்
பண்பா ளா.பர னே.பவித் திரனே,
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை
கரும மாவது மென்றனக் கறிந்தேன்,
அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.5

1613 தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்
சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்
தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய், கிரேத திரேத துவாபர
கலியு கமிவை நான்குமு னானாய்,
ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.6

1614 கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்.
கார்வண் ணா.கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்
எந்தாய். அந்தர மேழுமு னானாய்,
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப்
போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.7

1615 நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ.
நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,
கடியார் காளைய ரைவர் புகுந்து
காவல் செய்தவக் காவலைப் பிழைத்து
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்
கூறை சோறிவை தந்தெனக் கருளி,
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.8

1616 கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்
கூறை சோறிவை தா என்று குமைத்துப்
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்
புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே,
தீவாய் நாகணை யில்துயில் வானே.
திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன்,
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
7.9

1617 அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி
ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை
தூய மாலை யிவைபத்தும்
வல்லார், மன்னி மன்னவ ராயுல காண்டு
மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே.
7.10

1618 செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்
திருவடியி னிணைவருட முனிவ
ரேத்த, வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும்
வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து
வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
8.1

1619 முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண முனிவரொடு
தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்
பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்
அவைமுரலச் செங்கமல மலரை யேறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.2

1620 குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்
கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன
நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன்
காண்மின், மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு
வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.3

1621 சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்
திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி
எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க
பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.4

1622 சினமேவும் அடலரியி னுருவ மாகித்
திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு,
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாளவுயிர் வவ்வியவெம் மாயோன்
காண்மின், இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை
ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல்,
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.5

1623 வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி
மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,
தானமர வேழுலகு மளந்த வென்றித்
தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்,
தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்
செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.6

1624 பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப்
பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்,
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ
அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.7

1625 கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு
பறித்துமழ விடையடர்த்துக் குரவை
கோத்து, வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த
தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்,
செம்பவள மரகதநன் முத்தம் காட்டத்
திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்,
அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.8

1626 ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி
நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்,
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித்
திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
8.9

1627 பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப்
படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,
அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும்
அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,
கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன்
கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,
ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார்
ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே.
8. 10

1628 கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்
வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்
துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே 9.1

1629 தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு
கஞ்சி மருவி,பிரிந் தவர்வாய்மொழி
மதியாதுவந் தடைவீர்,
திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,
உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே 9.2

1630 பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.
அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்
துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே 9.3

1631 வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 9.4

1632 நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே 9.5

1633 முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே 9.6

1634 சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்
மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,
தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்
தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே 9.7

1635 மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே 9.8

1636 கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா,
பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா,
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. 9.9

1637 சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,
பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே 9.10

1638 பெரும்பு றக்கட லையட லேற்றினைப்
பெண்ணை யாணை,எண் ணில்முனி வர்க்கருள்
தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப்
பத்த ராவியை நித்திலத் தொத்தினை,
அரும்பி னையல ரையடி யேன்மனத்
தாசை யை அமு தம்பொதி யின்சுவைக்
கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
10.1

1639 மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்
மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,
மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை
மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,
நென்ன லைப்பக லையிற்றை நாளினை
நாளை யாய்வரும் திங்களை யாண்டினை,
கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.2

1640 எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை
வாச வார்குழ லாள்மலை மங்கைதன்
பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப்
பான்மை யைப்பனி மாமதி யம்தவழ்
மங்கு லைச்,சுட ரைவட மாமலை
உச்சி யை,நச்சி நாம்வணங் கப்படும்
கங்கு லை,பக லைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.3

1641 பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத்
தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,
மாய னைமதிள் கோவலி டைகழி
மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள்
ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை
எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை
காசி னைமணி யைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.4

1642 ஏற்றி னையிம யத்துளெம் மீசனை
இம்மை யைமறு மைக்கு மருந்தினை,
ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும்
ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை
நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.5

1643 துப்ப னைத்துரங் கம்படச் சீறிய
தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்
செப்பி னை,திரு மங்கைம ணாளனைத்
தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி
ஒப்ப னை,உல கேழினை யூழியை
ஆழி யேந்திய கையனை அந்தணர்
கற்பி னை,கழு நீர்மல ரும்வயல்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.6

1644 திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்
தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்த னை,அரி யைப்பரி கீறிய
அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற
கருத்த னை,களி வண்டறை யும்பொழில்
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.7

1645 வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக்
கன்று வீசிய ஈசனை, பேய்மகள்
துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத்
தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய
நஞ்சி னை,அமு தத்தினை நாதனை
நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,
கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்,
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.8

1646 பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்
பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை
வேள்வி யைவிளக் கினொளி
தன்னை, மண்ணி னைமலை யையலை நீரினை
மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
10.9

1647 கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று
காத லால்கலி கன்றியு ரைசெய்த,
வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை
வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்
விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்
மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய
கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில்
கற்க லாம்கவி யின்பொருள் தானே.
10.10